74 வயதில் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி

குழந்தைப் பேறுக்காக எத்தனையோ பேர் கோவில் கோவிலாக சுற்றி கொண்டிருக்க, அறிவியல் தொழில்நுட்பத்தால் 74 வயதில் ஒரு மூதாட்டி தாய்மை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார். மருத்துவ உலகில் இந்த அரிய நிகழ்வு எப்படி நிகழ்ந்தது என்பதை தற்போது பார்ப்போம்.

ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நெல்லமார்தி கிராமத்தைச் சேர்ந்த எரமட்டி ராஜாராவ் – மங்கயம்மா ஆகியோருக்கு 1962 மார்ச் 22 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் 57 ஆண்டுகள் ஆகியும் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லையே என்ற கவலை இருவரையும் வாட்டியது. சக வயதுடையவர்கள் தாத்தா-பாட்டிகளாக மாறி மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள் எனப்பார்த்து, பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதைப் பார்த்து ராஜாராவும், மங்கயம்மாவும் மனம் நொடிந்து போனார்கள்.

ஒருகட்டத்தில் செயற்கை கருவூட்டல் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை கருவூட்டல் நிபுணர்களான, மருத்துவர்கள் ஷானக்கயலா, அருணா உமாசங்கர் ஆகியோர் மருத்துவ பரிந்துரைப்படி செயல்பட்டனர்.

அதன்படி செயற்கை கருவூட்டல் முறைப்படி மங்காயம்மா கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் இன்று காலை அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தாயும் சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்கை கருவூட்டல் மூலம் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து மங்காயம்மா புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு 72 வயதான தல்ஜிந்தர் கவுர் எனும் மூதாட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றெடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மங்கயம்மா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே