இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 68,000 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 68,020 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2020 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இதுவே புதிய உச்சமாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 68,020 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரே நாலில் 291 பேர் உயிரிழந்தனர். தற்போது நாடு முழுவதும் 35,498 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1.2 கோடி பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 2020 தொடங்கி தற்போதுவரை 1,61,843 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர். அங்கு பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

அதேபோல் டெல்லி மாநில அரசும் திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூட கெடுபிடி விதித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் முழுவீச்சில் நடைபெறுவதால் கரோனா இரண்டாம் அலை அச்சம் அதிகமாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே