இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு..!!

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,773 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 38,945 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,34,48,163 -ஆக உயா்ந்துள்ளது.

38,945 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,26,71,167 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,32,158-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 309 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,44,838 -ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ள நிலையில், அங்கு தினசரி பாதிப்பும் இறப்பும் தொடா்ந்து அதிகமாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,325 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80,43,72,331 கோடியாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை மட்டும் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 55,23,40,168 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 15,59,895 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே