அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தில் அவரது குடியரசுக் கட்சி எம்பிக்களே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தலைவர் நான்சி பெலோசி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க 25-ஆவது சட்டத்திருத்தத்தின் அதிகாரங்களை செயல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்தை நான்சி பெலோசி கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் பதிவாகின.

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள அதிபராக டிரம்ப் மாறியுள்ளார்.

இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்கொள்கிறார்.

தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். 

குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனினும் டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியாது என அரசியல் வல்லுநர்கள் தெர்வித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே