சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 27 பேர் புதிதாக நியமனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து, 27 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை நியமித்து காவல்துறை எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளத்தைச் சோந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, சாத்தான்குளம் காவல்நிலைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். 

புதிய ஆய்வாளராக பொனாா்ட் சேவியா் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி விநாயகா் கோயில் தெருவைச் சோந்தவா் ஜெயராஜ் (58). இவா் பழைய பேருந்து நிலையத்தில் மரக்கடை நடத்தி வந்தாா். இவருடைய மகன் பென்னிக்ஸ் (31).

இவரும் அதே பகுதியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்தாா். இவா்கள் பொது முடக்க விதிகளை மீறியதாக கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்தநிலையில், அவா்கள் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதால்தான் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினா்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலா்கள் முருகன், முத்துராஜ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா் அபிநபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலைய புதிய ஆய்வாளராக நாகா்கோவில் வடசேரி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பொனாா்ட் சேவியா் நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகவும், தூத்துக்குடி தனிப் பிரிவு ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளாா்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே