வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மேலும் 2 வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

நெல்லையைச் சேர்ந்த மனோகரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும்கல்வியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு பிப். 28-ல் சட்டம் நிறைவேற்றியது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான மொத்தமுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், 68 சமூகங்கள் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீதஇடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 40 சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னியர்களுக்கு 10.5சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கைக்காக மதுரையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது போன்ற வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இவ்விரு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பிரபு மற்றும் பரவர் சமுதாயத்தின் சார்பில் என்.வளன்சந்திரா ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே