கடந்த 2 ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் தற்போதைய நிலை என்ன?? என்பதைக் கண்டறிந்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய 2 கல்வி ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில்கிறார்களா? அல்லது பணிபுரிகிறார்களா? என்பதை கண்டறிந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயின்று வந்தால் அது குறித்த விவரங்களையும், பணிபுரிகிறார்கள் எனில் அது குறித்து விவரங்களையும் உள்ளீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கென கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில், தனிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறுவள மைய தலைமை ஆசிரியர்களும், தங்களது ஆளுகையின் கீழ் வரும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கண்டறிந்து அக்.4-ம் தேதிக்குள் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்