விக்ரம் லேண்டருடன் 14 நாட்களுக்குள் தொடர்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க முற்பட்டபோது, 2 கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசிப் பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படாததால் தொடர்பை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சிவன் மேலும் தெரிவித்தார்.

ஒரு வருட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஆர்பிட்டரில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் ஏழரை ஆண்டுகள் வரை செயல்படும் என்று கூறிய சிவன், இதனால் சந்திரயான்-2 திட்டம் ஏறத்தாழ 100 சதவீத வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.

அறிவியலில் எப்போதும் அனுபவங்களைத்தான் தேட வேண்டும் என்றும், அந்த அனுபவங்கள் முடிவுகளை அளிக்கும் என பிரதமர் கூறிய வார்த்தைகள் ஊக்கம் அளித்துள்ளதாக சிவன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே