வயதான தம்பதியை சிக்க வைக்க வழக்கறிஞர் பொய் புகார்

சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் நகை திருடப்பட்டதாக பொய்யான புகார் கொடுக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் சத்யமூர்த்தி என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்து 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தந்து இருந்தார்.

வீட்டிற்கு அருகே வசிக்கக்கூடிய வயதான தம்பதி, தன்னுடைய மனைவி ஜோதியை வசியம் செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டதாகவும் சத்தியமூர்த்தி கூறியிருந்தார்.

வீட்டின் பூட்டு, பீரோ போன்றவை உடைக்கப்படாத நிலையில் நகை, பணம் எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது என்று காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

சத்யமூர்த்தியின் மனைவி ஜோதியும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்ததாக தெரிகிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதிலும், கொள்ளையர்கள் வந்து போனதற்கான தடயமும் இல்லாததால் ஜோதியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கொள்ளை போனதாக சொல்லப்படும் நகையை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து அதன் மூலமாக கிடைத்த பணத்தில் நிலம் வாங்கி உள்ளதாக ஜோதி கூறியுள்ளார்.

எதிர்வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியை கொள்ளை வழக்கில் சிக்க வைப்பதற்காகவே சத்தியமூர்த்தியும், ஜோதியும் நாடகமாடியது தற்போது உறுதியாகி இருக்கிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே