‘ரைட் லைவ்லி ஹூட்’ விருதுக்கு சிறுமி க்ரேடா தன்பெர்க் தேர்வு

நோபலுக்கு இணையான விருதாக கருதப்படும் ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் “ரைட் லைவ்லி ஹூட்” (Right Livelihood) விருதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி க்ரேடா தன்பெர்க்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுக்கு தீர்வு மற்றும் விடைகள் அளிக்க முன்வருவோரை ஆதரிக்கும் வகையிலும், அவர்களை கெளரவிக்கும் வகையிலும் ஸ்வீடன் நாட்டிலுள்ள ரைட் லைவ்லி ஹூட் அறக்கட்டளையால்,ஆண்டுதோறும் விருது அளிக்கப்பட்டுவருகிறது.

2019ம் ஆண்டுக்கான ரைட் லைவ்லி ஹூட் விருதுக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி க்ரேடா தன்பெர்க்கும் ஒருவராவார்.

  • பிரேசிலை சேர்ந்த பழங்குடியின தலைவர் டேவி கோபநாவா,
  • சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்குரைஞர் குவோ ஜியான்மெய்,
  • மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் ஆகியோரும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 4 பேருக்கும் விருதுடன் சேர்த்து தலா 1.3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படவிருக்கிறது.

முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு ஓராண்டுக்கு முன்பு சிறுமி க்ரேடா தன்பெர்க் தனியொரு ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அண்மையில் ஐ.நா. சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிறுமி க்ரேடா தன்பெர்க், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக குற்றம்சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே