மோடிக்கு முத்தம்…பாசத்தை பொழிந்த இந்தியர்கள்..!

7 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன் தினம் அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

போஸ்ட் ஓக் நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும், இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.

இதை அடுத்து, டெக்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்தார்.

சீக்கியர்களைச் சந்தித்த மோடி அவர்களுடன் கலந்துரையாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் அளித்தனர்.

இதை அடுத்து போரா சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது மோடிக்கு அவர்கள் சால்வை அணிவித்தனர். 

பின்னர் காஷ்மீரி பண்டிதர்களை மோடி சந்தித்தார். அப்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்ட காஷ்மீரி பண்டிதர் ஒருவர், மோடியின் கையைப் பற்றிக் கொண்டு முத்தமிட்டார்.

இதைத் தொடர்ந்து உலகின் முன்னணி எரிசக்தி சார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உடனான வட்ட மேசை சந்திப்புக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். ஏர் புரொடக்ட்ஸ், டெல்லுரியன், எக்சான் மொபில், பேகெர் ஹியூக்ஸ் ஆகிய 16 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஆண்டுக்கு 500 கோடி கிலோ கிராம் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதென அமெரிக்காவின் டெல்லுரியன் நிறுவனத்துடன் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஹவுடி மோடி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க உள்ளார். என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் 50,000 பேர் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றுகிறார். இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்ற உள்ளது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். இந்திய நேரப்படி, மாலை 6 மணி அளவில் ஹவுடி மோடி நிகழ்ச்சி தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே