டீசல் கார்களின் புகை வெளியிடும் அளவு குறித்த சோதனைகளின்போது மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வோக்ஸ்வேகன் கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆகியோர் மீது ஜெர்மனியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டீசல் கார்களின் புகை உமிழ்தல் சோதனைகளின் போது வோக்ஸ்வேகன் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது கடந்த 2015ம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மோசடி காரணமாக அந்த நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் அளவுக்கு சரிந்து பங்குதாரர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
ஜெர்மன் நாட்டுச் சட்டப்படி பங்குகள் சரியும் அபாயம் ஏற்பட்டால் பங்குதாரர்களிடம் நிர்வாகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
ஆனால் அந்நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ மார்டின் விண்டர்கோன், இதனை தெரிவிக்க தவறிவிட்டார் என்று ஜெர்மனி அதிகாரிகள் தற்போது புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் தற்போதைய சி.இ.ஓ ஹெர்பர்ட் டைஸ் மற்றும், நிறுவன தலைவர் ஹேன்ஸ் டையட்டர் போட்ஸ்ச் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.