வெளிநாட்டு பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக இருப்பதாகவும், தான் சென்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம் குறித்து எதிர்கட்சித் தலைவர் கூறிய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு, தான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மு.க. ஸ்டாலின் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கலப்பினப் பசுக்களை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

வெளிநாட்டுப் பயணம் தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிச்சயமாக என்று கூறினார். நீர் சிக்கனம் குறித்து அறிந்து கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சருக்கு ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே