விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

வறட்சி இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நஷ்டத்திற்கு உள்ளாகும் விவசாயிகள் உயிரை விடும் அளவிற்கு தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

இவற்றை தடுத்து, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து 60 வயதை எட்டும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் தலா 3ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யும் பிரதமரின் சிறு குறு விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருந்தது.

10 ஆயிரத்து 744 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பிரதமரின் சிறு குறு விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்துக்கான பதிவு கடந்த மாதம் எட்டாம் தேதி தொடங்கியது.

60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் கிடைக்க வழிவகை செய்யும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் தகுதியுடையவர்களாவர்.

விவசாயி ஒருவர் பிரீமியம் செலுத்த தொடங்கி குறைந்த பட்சம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவரது 60 வயதுக்குப் பின்னர் மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். விவசாயிகள் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளில் ஏற்றபடி பிரீமியம் தொகை மாறுபடும்.

18 வயது பூர்த்தியான விவசாயி ஒருவர் மாதம்தோறும் பிரீமியம் தொகை 55 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே 30 வயதானவராக இருந்தால் அவர் மாதம் தோறும் 150 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கு மேல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மாதம்தோறும் 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எல்ஐசி மூலமாக விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு குறு விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள எல்ஐசி அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ள கடந்த மாதம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்திட்டமானது தனிநபர் பயன்படும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரே குடும்பத்தில் தகுதியுள்ள நபர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பிரீமியம் செலுத்தி வரும் விவசாயி ஒருவேளை இறந்துவிட்டால் நாமினி எனப்படும் வாரிசுதாரர் என்ற வகையில் அவரது மனைவி பிரீமிய தொகையை தொடர்ந்து செலுத்தினால் முதிர்வு காலத்திற்கு பின்னர் மாதம்தோறும் மூன்றாயிரம் ரூபாய் பெறலாம்.

பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், எல்ஐசி மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தின் மூலமும் பதிவு செய்யலாம்.

ஆண்டுதோறும் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை பெறும் விவசாயிகளும், பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 12 கோடி சிறு குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இந்த திட்டத்தை நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே