தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வனும்,
தி.மு.க. சார்பில் புகழேந்தியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணனும்,
தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமாரும்,
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
கடந்த 23ந் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் 8 பேரும், நாங்குநேரியில் 12 பேரும் மனு அளித்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் மேலும் பலர் மனு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு வருகிற 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெற உள்ளன.