வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் கண்காட்சி

திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் காஞ்சிபுரம் அத்திவரதராஜ பெருமாள் இடம் பிடித்துள்ளார்.

9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களை கவரும் பொருட்டு பாபவிநாசம் சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மலர், புகைப்படங்கள், மணல் சிற்பங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதருக்காக தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த கௌரி, நீலாம்பிகை சகோதரிகள் உருவாக்கிய கருடாழ்வார் மீது மகாவிஷ்ணு பறந்து வருவது போன்ற மணல் சிற்பம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் மலர் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, பக்தர்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே