வங்கிக்கு செல்லாமலும் பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம். அட்டை இல்லாமலும் ஆதார் எண்ணைக் கொண்டு பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்குமான தகவல்தொடர்பு ஆதாரமாக விளங்கி வந்த அஞ்சல்துறையின் முக்கியத்துவம், செல்ஃபோன்கள், இ மெயில், கூரியர் நிறுவனங்கள் ஆகியவற்றால் குறைந்துவிட்டது. இதையடுத்து வங்கிச் சேவையில் களமிறங்கிய அஞ்சல் துறை அதில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஏராளமாக இருந்தாலும், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வங்கிச் சேவை எட்டாக்கனியாகவே உள்ளது. அவர்கள் நகர வங்கிகளுக்கு வரவேண்டிய நிலையை மாற்றி வங்கி சேவையை எளிமைப்படுத்தும் வகையில் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி” திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 121 தபால் நிலையங்கள் வங்கி சேவை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 580க்கும் மேற்பட்டவை கிராமபுறங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

வங்கி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் aadhar enabled payment service என்ற புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் வங்கிக்கு செல்லாமல், வங்கி பாஸ் புக் அல்லது ஏ.டி.எம்.கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யமுடியும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம். அதற்கு வாடிக்கையாளரின் வங்கி கணக்கு ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பணம் செலுத்துதல், இருப்புத் தொகை தெரிந்துகொள்ளுதல், மினி ஸ்டேட்மெண்ட் பெறுதல் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே