நிலவில் தரை இறக்கும் முயற்சியின் போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சுற்றுக் கலன், லேண்டர், ஆய்வூர்தி ஆகிய மூன்று பாகங்களைக் கொண்ட சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22ஆம் தேதி அன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த பிறகு, பிரக்யான் ஆய்வூதியுடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர, மறுபுறம் ஆர்பிட்டர் எனப்படும் சுற்றுக்கலன், குறைந்தபட்சமாக 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுப் பாதையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரை, நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் தரை இறக்கும் செயல்பாட்டை சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இஸ்ரோ மேற்கொண்டது. மெல்ல, மெல்ல விக்ரமின் வேகம் அதிகரிக்கப்பட்டு அதேவேளையில், தேவையான இடத்தில் வேகத்தைக் குறைத்து, கோணத்தை மாற்றும் மிகச் சவாலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
நிலவில் இருந்து 2 கிலோ மீட்டர் என்ற உயரத்தை விக்ரம் லேண்டர் அடைந்த போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது. ஆர்பிட்டர் மூலமாக, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தொடர்பான தெர்மல் இமேஜ் புகைப்படத்தை, ஆர்பிட்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் லேண்டர் உடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என சிவன் கூறியுள்ளார். லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தகவல் தொடர்பு மீட்டமைக்கப்படும் என்றும் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.