ரயில்வே போனஸ் அறிவிப்பு – பிரகாஷ் ஜவடேகர்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்குவதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஜவடேகர், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

இதேபோன்று கடந்த 6 ஆண்டுகளாக பாஜக அரசு தொடர்ச்சியாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 11 லட்சத்து 52 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது ரயில்வே உற்பத்தி திறனுக்காக ஊழியர்களுக்கு அரசு அளிக்கும் வெகுமதி என்றும், இதன் மூலம் அரசுக்கு 2024 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே