மோடிக்குத் தடை; பாகிஸ்தானுக்கு கண்டனம்

பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு, வான்வழியை பயன்படுத்த அனுமதிக்காத பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒருவார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில், இந்திய பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக அதிகாரி, பாகிஸ்தானின் செயல்பாடுகள் இருதரப்பு உறவில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றார். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்தியாவுடனான வர்த்தக, போக்குவரத்து உறவுகளைத் துண்டித்துக் கொண்ட பாகிஸ்தான், தூதரக அதிகாரிகளையும் வாபஸ் பெற்றது.

இரு நாடுகளுக்கு இடையே இயங்கி வந்த ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட வான்வழி தடங்கள் வழியாக பறக்கவும், பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே