மேகாலயாவுக்கு இட மாறுதல் தொடர்பான கொலிஜியத்தின் முடிவு

கொலிஜியத்தின் முடிவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட வி.கே.தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது.

அதனை மறுபரிசீலனை செய்ய கொலீஜியத்திற்கு தஹில் ரமாணி கடிதம் அனுப்பியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை கொலீஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசுத் தலைவருக்கும் தஹில் ரமாணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில்ரமாணி மதிக்கவேண்டும் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. ராஜினாமா கடிதம் அளித்தது கொலிஜியத்தின் முடிவை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது. தஹில் ரமானி இடமாற்றத்துக்கும் குஜராத் பில்கிஸ் வழக்குக்கும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தகவல் தவறு என்றும் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும், சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாறுதல் செய்த போது ஏற்றுக்கொண்டதைப் போல மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் என்றும் இந்திய பார் கவுன்சில் தஹில் ரமானியை கேட்டுக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் தஹில் ரமாணி மற்றும் அஜய்குமார் இடமாறுதல் குறித்த முடிவுக்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை என்றும் இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே