மெட்ரோ ரயிலின் ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ, சீருந்து இணைப்பு சேவைகள்

மெட்ரோ ரயிலின் ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ மற்றும் சீருந்து இணைப்பு சேவைகளை கடந்த மாதம் மட்டும் 48,118 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திக்குறிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஷேர் ஆட்டோ இணைப்பு சேவைகள் 5 ரூபாய் கட்டணத்திலும், 3 கிலோமீட்டர் தூரம் வரையான ஷேர் டாக்சி சேவைகள் 10 ரூபாய் கட்டணத்திலும் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் இருந்து கடந்த மாதம் மட்டும் 4763 பேர் ஷேர் டாக்சி சேவையையும், 36,368 பேர்  ஷேர் ஆட்டோ சேவையையும் பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு சேவைகளையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 4 லட்சத்து 86 ஆயிரத்து 205 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் பெங்களூர் மெகா கேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீருந்து இணைப்பு சேவை செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை செயல்படும் இந்த சேவைக்கு, ஒரேகட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயில் பயண அட்டை மற்றும் ஃபோர்டு மொபிலிட்டி என்ற நிறுவனம் தயாரித்த செயலி மூலம் கட்டணத்தை செலுத்தி வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மட்டும் குறிப்பிட்ட 6 ரயில் நிலையங்களில் இருந்து 4,987 பேர் சேவையை பயன்படுத்தியுள்ளதாகவும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே