முழு ஊரடங்கு : வெறிச்சோடிய நகரம்.! பலத்த போலீஸ் பாதுகாப்பு.!!

அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் கோவை மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையின்றி வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ள நிலையில், 12 சோதனைச் சாவடிகள் உட்பட நகரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடங்களில் வருவோரை கண்காணிக்க கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் காவலர்களும், புறநகர் பகுதியில் 1,500 காவலர்களும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் டிரோன் கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் பால் விற்பனை மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து, இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

குறிப்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகள், காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ், மருத்துவப் பணியாளர்களின் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது, தடையை மீறி முக கவசம் என்றும் வெளியே வரும் நபர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே