முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி வாக்குறுதியை அவரது மகள் நிறைவேற்றினார்.
கடந்த மாதம் 6 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மாரடைப்பால் சுஷ்மா சுவராஜ் காலமானார். உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் ஷால்வே உடன் அவர் தொலைபேசியில் உரையாற்றினார்.
அப்போது இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடியதற்காக, ஏற்கெனவே பேசியபடி ஒரு ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஹரிஷ் ஷால்வேயைக் கேட்டுக் கொண்டார். இந்த உரையாடலுக்குப் பின்னர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.
சுஷ்மா சுவராஜின் இறுதி வாக்குறுதியாகவே இது அறியப்பட்டது. இந்த நிலையில், தாயின் இறுதி வாக்குறுதியை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.
ஹரிஸ் ஷால்வேயை அவரது வீட்டில் சந்தித்த பன்சூரி, தமது தாய் கொடுப்பதாக உறுதி அளித்திருந்த படி ஒரு ரூபாயை வழங்கினார். அதை ஹரிஸ் சால்வே பெற்றுக் கொண்டார்.
இந்தப் புகைப்படத்தை சுஷ்மாவின் கணவரான சுவராஜ் கவுசல் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.