சென்னையில், கல்லூரி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பைகளை கொண்டே, மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு வீதிகளில் சிதறிக்கிடக்கும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும், FIT INDIA PLOGGING RUN PICK-UP என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளுடன் பல்கலைக்கழகத்திலிருந்து அருகில் உள்ள தெருக்களில் நடந்து சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தவாறு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மக்காத பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள், கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை சேகரித்துள்ளனர்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்காத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தது சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து விளக்கமளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை நேற்றிரவு தான் வந்தது என்பதால், அவசரகதியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் தவறு நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.