பொங்கல் பண்டிகை முன்பதிவு தொடக்கம்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைன் முன்பதிவு காரணமாக முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்ததது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே ஒருநாள் இடைவெளிக்கிடையே 8 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

ஜனவரி 11-ஆம் தேதி சனிக்கிழமையும் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 13-ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் பணி நாள். 14-ஆம் தேதி செவ்வாய் முதல் 17-ஆம் தேதி வெள்ளி வரை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் வருகின்றன. மீண்டும் ஜனவரி 18, 19 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளாக உள்ளன.

இதனை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களில் ஒருவாரம் தங்கி பொங்கலை கொண்டாடும் வாய்ப்புகளை கருதி ஜனவரி 10-ஆம் தேதியான வெள்ளிக் கிழமை முதல் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை ரயில் பயணத்துக்கான முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று முன்பதிவு செய்யலாம்.

11-ஆம் தேதி பயணத்துக்கு நாளையும், 12-ஆம் தேதி பயணத்துக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 13, 14-ஆம் தேதி பயணத்துக்கு முறையே செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம்.

பொங்கல் தினமான ஜனவரி 15-ஆம் தேதி பயணத்துக்கு செப்டம்பர் 17-ஆம் தேதியும், ஜனவரி 16, 17, 18, 19 தேதிகளில் பயணம் செய்ய முறையே அடுத்தடுத்த தேதிகளிலும் முன் பதிவு செய்யலாம். 

இதனிடையே ஜனவரி 10ஆம் தேதி பயணத்துக்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் டிராவல் ஏஜென்ட்டுகள் மூலமான முன்பதிவுகளால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனை முடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே