புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம், நத்தம், இரட்டை திருப்பதி உட்பட 9 கோயில்களிலும், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திருவேங்கடமுடையான் சுவாமி, அலமேலுமங்கை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.