பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கிஷோர் கே சுவாமி எனும் நபர் சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் தனது பெயரை குறிப்பிட்டு ஆபாசமாகவும், அவதூறாகவும் கிஷோர் கே சுவாமி பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் இருந்து அவதூறு பதிவுகளை கிஷோர் கே சுவாமி நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், ரெகவரி முறையில் அவதூறு பதிவுகளை உறுதி செய்த போலீசார் கிஷோர் கே சுவாமியை கைது செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அவர் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதை அடுத்து கிஷோர் கே.சுவாமி விடுவிக்கப்பட்டார்.
இதேபோல தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாகவும் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கில், கிஷோர் கே சுவாமி முன் ஜாமீன் பெற்று விட்டார்.