சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூக்குழி இறங்கி இந்துக்கள் மொகரம் தினத்தை அனுசரித்தனர்.
முதுவன்திடலில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த முஸ்லீம் மக்களால் கட்டப்பட்ட பாத்திமா பள்ளி வாசல் உள்ளது.
தற்போது முதுவன்திடலில் ஒரு முஸ்லீம் குடும்பம் கூட இல்லாத நிலையிலும் பாத்திமா பள்ளிவாசலை, கிராமத்தில் உள்ள இந்து மக்கள் நன்கு பராமரித்தும் , வழிபட்டும் வருகின்றனர். விதை நெல், அறுவடை செய்த முதல் நெல், விளைந்த காய்கறிகள் என அனைத்தையும் பள்ளிவாசலில் வைத்து வழிபட்ட பின்னரே உபயோகப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஆண்டு தோறும் மொகரம் தினத்தை முதுவன் திடல் கிராம மக்கள் அனுசரித்து வருகின்றனர். பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே காப்புக்கட்டி விரதமிருக்கின்றனர்.
பாத்திமா பள்ளிவாசலுக்கு முன்பாக அகலமான குழி வெட்டி பூக்குழி தயார் செய்து, ஆண்கள் நெருப்பில் வரிசையாக இறங்கியும், பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்து கொண்டு தலையின் மீது நெருப்பை அள்ளி கொட்டச் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
இந்த நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முஸ்லீம் மக்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.