திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தையை மூச்சுதிணறடித்து கொடூரமாக கொன்ற தாயும், அவருடன் தகாத உறவு வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி சோலையம்மாள். இவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த சோலையம்மாள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 14 ம் தேதி அவருக்கு 5 வதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு 16 ந் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் குழந்தையுடன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை அதிகாரி ஆரணி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்துவந்த சோலையம்மாளை போலீசார் கைது செய்து ஆரணிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது 5 வதாக பிறந்த பெண் குழந்தையை இரண்டே நாளில் கொன்று சேவூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் முட்புதரில் புதைத்ததாக திடுக்கிடும் தவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் தனக்கும் கணவரின் அண்ணன் பாபுவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகவும், இதில் குழந்தை பிறந்ததால் பாபுவுடன் சேர்ந்து குழந்தையை முகத்தை துணியால் பொத்தி மூச்சு திணறடித்து கொன்றதாகவும் போலீசில் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இதையடுத்து பாபுவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே கைதான இருவரும் தெரிவித்த தகவலின் பேரில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட போலீசார், அதனை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து குழந்தை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உடற்கூறாய்வு மருத்துவர் வருகைக்கு காத்திருக்கிறார்கள்.