பிரேக் பிடிக்காத டிப்பர் லாரி – பரபரப்பான சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிரேக் பிடிக்காத டிப்பர் லாரி ஒன்று, கார் மீது மோதி, சில மீட்டர் தூரத்திற்கு அந்த காரை இழுத்துச் சென்ற பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரபரப்பான சாலையில் நடந்த இந்த விபத்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சென்னை – கும்பகோணம், பண்ருட்டி – மடப்பட்டை இணைக்கும் சாலையின் நான்குமுனைச் சந்திப்பில் நேற்றிரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று, தறிகெட்டு ஓடி சாலை ஓரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியது.

இதில், ஜெயக்குமார், பரமானந்தம், சிவகுமார், மற்றும் ராஜகாந்தி ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் மீது மோதிய லாரி, அடுத்த விநாடியில் எதிர் திசையில் இடதுபுறமாக வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், ரங்கநாதனின் உடல், காருக்கு அடியில் சிக்கிக் கொண்டது. அவரது உடலுடன் காரை தள்ளிக் கொண்டு சென்ற டிப்பர் லாரியால் பதற்றம் நிலவியது.

காருக்குள் இருந்தவர்கள் அலறினர். நான்குமுனைச் சந்திப்பில் போக்குவரத்துக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் டிப்பர் லாரியைத் தடுக்க முற்பட்டார்.

ஆனால் டிப்பர் லாரி நிற்காமல் காரை தள்ளியபடி சென்றது. சில மீட்டர் தூரம் கடந்து, அந்த லாரி நின்றது. பரபரப்பான சாலையில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரேக் பிடிக்காத காரணத்தால் தான், இந்த விபத்து ஏற்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் ஓட்டுநரைப் பிடித்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தது.

ஓட்டுநர் ராமச்சந்திரனை கைது செய்த போலீசார், காரில் இருந்த இருவரை மீட்டனர். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிப்பர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்த போது பிரேக் செயல் இழந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும், எனவே எப்படியாவது லாரியை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்ததாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

எதிரே பேருந்து வந்த காரணத்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக சாலைத் தடுப்பில் லாரியை மோதி நிறுத்த முயன்றதாகவும், அப்போது தான் பாதசாரிகள் மீது மோத நேரிட்டதாகவும், கார் குறுக்கே வந்து சிக்கிக் கொண்டதாகவும் ஓட்டுநர் ராமச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் மீது மோதி வேகம் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் இல்லாவிட்டால் தொடர்ந்து அதிக விபத்துகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று ஓட்டுநர் ராமசந்திரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க பிரேக் செயல் இழக்கும் அளவுக்கு டிப்பர் லாரியின் பராமரிப்பு மோசமாக உள்ளதா??? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே டிப்பர் லாரியின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே