அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம் என பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள் என விமர்சித்தார்.
சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட விஜய், சமூக பிரச்னைகளுக்கு ஹாஷ் டாக் உருவாக்கி டிரெண்ட் செய்யுங்கள் என வலியுறுத்தினார்.
தம்முடையை போஸ்டரை கிழித்தாலும் பரவாயில்லை என கூறிய விஜய், ஆனால் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றார்.
வாழ்க்கை கால்பந்து போட்டி போன்றது என குறிப்பிட்ட விஜய், கோல் அடிக்க நாம் முயற்சி செய்யும் போது அதை தடுப்பதற்காக சிலர் வருவார்கள் எனவும் பேசினார்.
அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார்.
யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் எனவும் விஜய் சூசகமாக கூறினார்.