பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திடீர் விலகல்

பாதுகாப்பு காரணத்தால் தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்ததாகவும், ஐபிஎல் தொடரை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்ததில் அந்த அணியின் வீரர்கள்  6 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது.

இதனிடையே பாதுகாப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக நிரோஷன் திக்வெல்லா, குசல் பெரேரா, லசித் மலிங்கா, திசாரா பெரேரா உட்பட 10 வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபவத் சவுத்ரி, பாகிஸ்தான் வரும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுவார்கள் என இந்தியா அச்சுறுத்தியதாக தன்னிடம் வர்ணணையாளர்கள் சிலர் கூறியதாகவும், இது மிகவும் மலிவான திட்டம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பாதுகாப்பு கருதியே இந்த தொடரை சில வீரர்கள் தவிர்த்ததாகவும், பாகிஸ்தான் செல்ல தயாராக இருக்கும் வீரர்கள் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்தியா எந்த அச்சுறுத்தலும் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே