பஹாமஸ் தீவுகளைப் பந்தாடிய டோரியன் புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அதி தீவிரமான 5ம் நிலைப் புயலாக அறியப்பட்ட டோரியன் புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடந்த 24ம் தேதி உருவாகி கரீபியன் தீவுக் கூட்டங்களான பஹாமஸ் தீவுகளைத் தாக்கியது. எல்போ கே, மற்றும் கிராண்ட் பஹாமா ஆகிய இரு கடற்கரை நகரங்களில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது.
கார்கள், படகுகள், கண்டெய்னர்கள், வீடுகளின் மேற்கூரைகள் என எதையும் விட்டு வைக்காத டோரியன், ருத்ரதாண்டவம் ஆடியது.

கனமழையால் பஹாமஸ் தீவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடல் நீரும் நகரங்களுக்குள் புகுந்தது. இடுப்பளவு தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டோரியன் புயலுக்கு 20 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று பஹாமஸ் பிரதமர் ஹியூபர்ட் மின்னிஸ் கூறியுள்ளார். வரலாறு காணாத சேதத்தை டோரியன் ஏற்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வளம் தங்களிடம் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பஹாமசை தாக்கிய ‘டோரியன்’ புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாகவும், அடுத்த சில தினங்களில் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புளோரிடாவின் கடற்கரைப் பகுதிகள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் புயலுக்கு முன்னே அமைதி என்ற கோட்பாட்டின்படி அந்த மாகாணத்தின் உள்பகுதி பெரும் அமைதியுடன் காணப்படுகிறது. மழைநீர் வெள்ளமென தெருக்களில் ஓடுவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். அடுத்த 2 நாட்களுக்குள் டோரியன் புயல் ஃபுளோரிடாவைத் தாக்கும் எனத் தெரிகிறது.