பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேட்மா நகர் பகுதியை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டையில் துணி கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் மற்றும் சகோதரி குழந்தைகள் பேட்மா நகர் பகுதியில் உள்ள எம்.எம்.மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆகியோரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் கல்வி அதிகாரி வசந்தா, பள்ளிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யூனிஸ், வசந்தா குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது கடையில் யூனிஸ் இருந்த போது அங்கு வந்த 3 பேர் கடையின் கதவை உடைத்ததோடு, கல்வி அதிகாரி மீது புகார் தெரிவித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இதுகுறித்து புகாரை பாளையங்கோட்டை போலீசார் ஏற்க மறுத்த நிலையில், இதுகுறித்து நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 1-லில் யூனிஸ் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கல்வி அதிகாரி வசந்தா, பள்ளித்தாளாளர் சாகுல்ஹமீது உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் கல்வி அதிகாரி வசந்தா, பள்ளித்தாளாளர் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை மிரட்டல், அத்துமீறி கதவை உடைத்து உள்ளே நுழைந்தது என இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே