பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதல்வர் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சென்னையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழையின் அளவு உள்ளிட்டவை குறித்து விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.

இதையடுத்து பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார்.

அப்போது அவர், மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற தேவையான ஆட்களையும், மரம் அறுக்கும் இயந்திரங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்களை தயாராக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர், மற்ற பொருட்கள், மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதத்தையும், பொருட்சேதத்தையும் குறைக்க, அனைத்து துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக 30.27 கோடி ரூபாயும்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக 7.25 கோடி ரூபாயும்,

மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக ஒரு கோடி ரூபாயும் என மொத்தம் 38.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே