நீட் தேர்வில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை தந்தை வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

மாணவர் உதித்சூர்யா நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததை அவரது தந்தை ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் இருந்து உதித் சூர்யாவின் தாய் விடுவிக்கப்பட்டார். 

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சேர்ந்ததாக, கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சலில் புகார் வந்தது.

இதுதொடர்பாக கண்டமனூர் போலீசில், புகார் அளிக்கப்பட்டதை அடுத்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புதன் கிழமை அன்று திருப்பதியில் தனது குடும்பத்துடன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார்.

தேனி தனிப்படை போலீசார் உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாய் கயல்விழி ஆகியோரையும் கைது செய்து சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து அவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நள்ளிரவில் தேனி அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆள்மாறாட்டப் புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவ கல்லூரி பேரரசிரியர்கள் 2 பேரை, சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

இதை அடுத்து அவர்கள் அனைவரும் காலை 9 மணி அளவில், சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்.

உதித் சூர்யா சேர்க்கை தொடர்பான ஆவணங்களுடன் அவர்கள் சிபிசிஐடி அலுவலகம் சென்றனர். உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன், சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஆவர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், வெங்கடேசனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே வெங்கடேசனுக்கு உதவும் முயற்சிகள் நடைபெற்றதா?? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற அதேவேளையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான போலீசார் சோதனையும் நடத்தினர். அங்கு சில மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே உதித் சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகன் மருத்துவர் ஆக வேண்டுமென்ற ஆசையில் இதுபோன்ற தவறை செய்துவிட்டேன் என ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தவறை தற்போது உணர்ந்து விட்டதாகவும், எனவே தான் மகனுக்கு மருத்துவக் கல்வி தேவையில்லை என முடிவு செய்து இடையில் நிறுத்தி விட்டு சான்றிதழை வாங்கி சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடேசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் இருந்து உதித் சூர்யாவின் தாய் கயல்விழி விடுவிக்கப்பட்டுள்ளார். எந்த நேரம் அழைத்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க, உதித் சூர்யாவுக்காக தேர்வு எழுதிய நபரின் புகைப்படத்தை வைத்து அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே