நீட்தேர்வில் குளறுபடியை தவிர்க்க பயோமெட்ரிக் முறையை கொண்டு வரக்கோரி கடிதம்

நீட் தேர்வில் குளறுபடியை தவிர்க்க பயோமெட்ரிக் முறை மூலம் தேர்வர்களின் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என சிபிஎஸ்இக்கு கடிதம் எழுத உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வரும் காலங்களில் இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க பயோமெட்ரிக் முறை மூலம் தேர்வர்களின் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி சிபிஎஸ்இக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நேர்காணலுக்கு வரும் மாணவரின் கைரேகைகளை, தேர்வெழுதிய போது பதிவு செய்யப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து மருத்துவப் படிப்புகளில் சேர்க்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே