நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன், 18 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தால் அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தவிர, மேலும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 61 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி இந்த 64 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதிகபட்சமாக  கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், பாஜக மற்றும் காங்கிரசுக்கு கர்நாடகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்ட அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதுதவிர, பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள சமஸ்டிபூர் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

64 சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே 64 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கலும் தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே