நாகை, கடலூர் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை மானாவாரி பயிருக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூர், வடவூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
கிருஷ்ணன் கோவில், மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. விவசாயத்திற்கு இந்த மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.
கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, மகாராஜபுரம் , தம்பிபட்டி, கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் டைட்டன் பட்டி தெருவில் மழை நீர் புகுந்து வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். ஆயினும் இந்த மழை விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.