கேரளாவில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீது வைக்கப்பட்டு திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஆண்டுந்தோறும் நவராத்திரி விழா சமயத்தில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வேளிமலை முருகன் கோவில் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி கோவில் ஆகிய கோவில்களின் சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நவராத்திரி விழா வரும் 29ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இக்கோவில்களின் சிலைகள் நேற்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு காலையில் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், முன்னுதித்த அம்மன் சிலை மற்றும் முருகன் சிலை ஆகியவை பள்ளக்கு மீதும் வைக்கப்பட்டு ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று தொடங்கிய இந்த ஊர்வலம் தமிழக – கேரளா எல்லைப்பகுதிகளான குழித்துறை, களியாக்கவிளை வழியாக சென்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு நாளை மறுதினம் சென்றடையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.