தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வரும் ஸ்டார் நடிகர்களின் படங்கள்..!

விளம்பரங்களால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் கொண்டு செல்லப்படும் திரைப்படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவது புதிதல்ல. அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது பிரபாஸ் நடித்து உள்ள சாஹோ.

கோலிவுட், டோலிவுட் என அனைத்து தளங்களிலும் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருப்பது சாஹோ திரைப்படம். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் பெரும் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்ற பதில்தான் கொடுக்கின்றனர் ரசிகர்கள்.

350 கோடி கொட்டியெடுத்த திரைப்படத்தின் இயக்கம் சரியில்லை, திரைக்கதை சரி இல்லை என வறுத்தெடுத்து வருகின்றனர் இணையவாசிகள். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகாலம் படத்திற்காக தன்னை அர்ப்பணித்து இருந்த பிரபாஸிற்கு மிகப்பெரிய சறுக்கலை கொடுத்துள்ளது இந்த திரைப்படம்.

எதிர்பார்ப்புகளுடன் களம்காணும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. கடாரம் கொண்டான், என்ஜிகே, மிஸ்டர். லோக்கல், 2.0, மாரி – 2, சர்க்கார் என எதிர்பார்ப்பை எகிற வைத்து அதனை பூர்த்தி செய்யாமல் போன படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களுக்கான விளம்பரம் என்பது பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் போஸ்டர் விளம்பரங்கள் மட்டும் ஆகவே இருந்தது. ஆனால் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி படம் வெளியாகும் வரை படங்களின் விளம்பரத்தை அதிகரித்து எதிர்பார்ப்பை எகிற வைத்து விடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

முதல் மூன்று நாட்கள் வசூலை குறிவைத்து நடத்தப்படும் இந்த விளம்பர வேகம், படங்களின் தரம் குறைவாக இருக்கும் எனில் அதில் உழைத்தவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி குறியாக்கி விடுகிறது என முணுமுணுக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு கொடுக்கப்படும் இத்தகைய முக்கியத்துவத்தால், பல சிறிய படங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோலிவுட்டில் மட்டும் தற்போது 450 படங்கள் முடங்கி உள்ளதாக வெளியான தகவல் இங்கே நினைவு கூறப்பட வேண்டும்.

ரசிகன் என்பவன் திரையரங்கு நோக்கி செல்லும் போது அவனது பிரதான எதிர்பார்ப்பு ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு, பட்ஜெட், பிரம்மாண்டம் இவற்றை தாண்டி படத்தில் என்ன சொல்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.

வெறும் பிரம்மாண்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் வைத்தே படங்களை வெற்றி பெற செய்து விட முடியாது என்பதற்கு பெரிய பட்ஜெட் படங்களின் தோல்வி ஒரு சான்று.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே