துப்பட்டாவில் தடவப்பட்ட மயக்க மருந்து; ஆட்டோ டிரைவரிடமிருந்து தப்பிய சென்னை சிறுமி!

சென்னை, பெரவள்ளூர் பெரியார் நகர், 1-வது குறுக்குத் தெருவில் 14-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 11-வயது சிறுமி தனியாக அந்தத் தெருவில் காலை 8 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ, சிறுமியை இடிப்பது போல வந்து நின்றது. அதனால் பயந்து போன சிறுமி, ஆட்டோ டிரைவரிடம் என்ன அங்கிள் இப்படி வண்டிய ஓட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அதனால் டிரைவர், சிறுமியின் மேல் ஏதோ ஒரு திரவத்தை தெளித்துள்ளார். அது, அவளின் துப்பட்டாவில் விழுந்துள்ளது. என்னவென்று சிறுமி சுதாரிப்பதற்குள் ஆட்டோ டிரைவரின் கைகள் சிறுமியை பிடித்திருந்தது.

அதனால் சிறுமி இன்னும் அதிர்ச்சியடைய ஹெல்ப், ப்ளீஸ் ஹெல்ப் என சத்தம் போட்டுள்ளார். அதனால் ஆட்டோ டிரைவர் சிறுமியை வலுகட்டாயமாக ஆட்டோவுக்குள் ஏற்ற முயற்சி செய்துள்ளார். டிரைவருடன் சிறுமி மல்லுகட்டியுள்ளார். அப்போது டிரைவர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாததால் சிறுமிக்கு யாரும் உதவ வரவில்லை. ஆனாலும் சிறுமி தனியாக டிரைவருடன் போராடினாள். அப்போதுதான் சிறுமிக்கு அந்த யோசனை வந்தது. தன்னை இறுக்கமாக பிடித்திருந்த டிரைவரின் கையை சிறுமி தன்னுடைய முழு பலத்தைக் கொண்டு கடித்தார். அதனால் வலி தாங்க முடியாத டிரைவரின் பிடி விலக தொடங்கியது.

அப்போது டிரைவரிடம் இருந்து சிறுமி தப்பி வீட்டை நோக்கி ஓடினாள். டிரைவரும் ஆட்டோவில் சிறுமியை சிறிது தூரம் விரட்டினார். ஆட்டோ செல்ல முடியாத தெருவுக்குள் நுழைந்த சிறுமியின் கால்கள் வீட்டில் வந்து ஓய்வெடுத்தன. மகளிடம் ஏன் இப்படி ஓடிவந்தாய் என்று அவரின் அம்மா கேட்க, சில நிமிடங்கள் சிறுமியால் பேச முடியவில்லை. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறக, ஆட்டோ டிரைவரால் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார். அதைக் கேட்க கேட்க சிறுமியின் அம்மாவின் ஹாட் வேகமாக துடிக்க தொடங்கியது. மகளை தன்னோடு சேர்த்து அரவணைத்துக் கொண்ட அந்த தாய், கடவுளுக்கு நன்றி கூறினாள். பின்னர் மகளின் சமயோகிதத்துக்காக பாராட்டினாள்.

அதோடு விடாமல் தன்னுடைய மகளுக்கு நடந்த கொடூமை வேறு எந்த மகளுக்கும் நடக்கக்கூடாது என்று கருதிய சிறுமியின் அம்மா, மகளை அழைத்துக்கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரிடம், சிறுமியும் சிறுமியின் தாயும் ஆட்டோ டிரைவர் செய்த சேட்டைகளை விரிவாக எடுத்துக் கூறினர். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரி, சிறுமியின் செயலை பாராட்டியதோடு தன்னுடைய உயரதிகாரியான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு போனில் விவரத்தைக் கூறினார்.

உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரைப் பிடியுங்கள். மேலும் சிறுமிக்கு துணை கமிஷனரும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிறுமிகள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் போது பயப்படாமல் உன்னைப் போல தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும் என்று துணை கமிஷனர், சிறுமியை தைரியப்படுத்தினார். இதையடுத்து துணை கமிஷனர் பெரவள்ளூரில் ஆட்டோ டிரைவருடன் சிறுமி போராடி வெற்றி பெற்ற சம்பவத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு ரிப்போர்ட்டாக அனுப்பினார்.

இதற்கிடையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதோடு அவரைக் கடத்த திட்டமிட்ட ஆட்டோ டிரைவர் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரியின் தலைமையிலான டீம் விசாரித்தது. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் சிறுமி கொடுத்ததகவலின்படி திருவிக நகரைச் சேர்ந்த ஹரிபாபு (24) என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரை சிறுமியும் அடையாள் காட்டினார். பின்னர் போலீஸார் தங்கள் பாணியில் ஹரிபாவுவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹரிபாபு மது இந்திய தண்டனைச் சட்டம் 341,323,364,511 ஆகிய பிரிவுகளின் கீழும் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபாபு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆட்டோ டிரைவருடன் சிறுமி போராடிய தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சிறுமியை நேரில் அழைத்து பாராட்டும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனால் சிறுமியைச் சந்தித்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நடந்த சம்பவங்களை பொறுமையாக கேட்டறிந்தார். பின் அந்தச் சிறுமிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த போலீஸாரையும் கமிஷனர் பாராட்டினார். இந்தச் சூழலில் ஈரோடு மாவட்டத்துக்கு சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சென்னை சிறுமியின் வீரத்தை பகிர்ந்துக் கொண்டார். சென்னைச் சிறுமியின் வீர தீர செயல்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே