துணி உலரவைத்தபோது மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, துணி உலரவைத்தபோது,கொடிக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கலக்குறிச்சி அடுத்த கோபால்பதியை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் என்பவர், நேற்று மாலை வீட்டின் முன் அமைக்கப்பட்டுள்ள இரும்பு மேற்கூரை பகுதியில் உள்ள கம்பியில் ஈர துணியை காய வைக்க சென்றுள்ளார்.

அப்போது, மின்கம்பத்திலிருந்து வீட்டுக்கு சப்ளையாகும் மின்ஒயர் அறுந்து இரும்பு மேற்கூரை மீது விழுந்துள்ளது.

இதனை அறியாது ரவிக்குமார், மேற்கூரையை ஒட்டி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தாயார் பாக்கியலட்சுமி அவரை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவே, இருவரும் உதவிக்கேட்டு அலறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த ரவிக்குமாரின் மனைவி பூங்கொடி மற்றும் மகன் ரஞ்சித் ஆகியோர் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து 4 பேரும் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தை சேர்ந்த சில விவசாயிகள், சாமர்த்தியமாக அவர்களை மீட்டு, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ரவிக்குமார் மற்றும் அவரது தாயார் பாக்கியலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

ரவிக்குமாரின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், மின்சாரம் தாக்கி ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே