தீபாவளிக்கு எளிதாக மக்கள் பயணம் செய்ய நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்து துறை செயலர் மற்றும் போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றார்.

இதற்காக சென்னையில், கடந்த ஆண்டைப் போலவே, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மதுரவாயல், மாதாவரம், கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 23ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது என்றும், 26 இடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், மேலும் ஒரு மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதாக கூறினார்.

இன்னும் ஓர் ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே