இங்கிலாந்தின் பழம்பெரும் தாமஸ்குக் நிறுவனம் திவாலானதால் அதில் பணியாற்றிய 21 ஆயிரம் பேர் ஒரே நாளில் வேலையிழந்தனர். அந்த நிறுவனத்தை நம்பி சுற்றுலா சென்றிருந்த 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் திவால் அறிவிப்பால் பரிதவித்துப் போயுள்ளனர்.
சர்வதேச அளவில் சுற்றுலா ஏற்பாடு செய்வதில் முக்கிய இடத்தில் உள்ள தாமஸ்குக் என்ற நிறுவனத்தில் 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
1841ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக ஐரோப்பிய நாடுகள் உள்பட 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் விமானங்கள் உள்ளன.
ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருமையை பெற்றது தாமஸ் குக்.
இந்நிலையில் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகளிடம் கடன் பெற்று மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது தாமஸ் குக்.
உடனடியாக கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் வற்புறுத்தியதைத் அடுத்து ஏராளமான கடன் பிரச்சினையால் அந்நிறுவனம் தத்தளித்து வந்தது.
கடன் சுமை 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கவே, நெருக்கடியும் அதிகரித்தது. கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கவே தனது பங்குதாரரான சீனாவின் Fosun நிறுவனத்தை தாமஸ் குக் நாடியது.
சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது.
ஆனால் கடைசி நேரத்தில் மேலும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கடன் கொடுத்த நிறுவனங்கள் வற்புறுத்தவே, வேறு வழியின்றி தவித்த தாமஸ் குக், திவால் என அறிவித்தது.
தாமஸ் குக் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்புவது சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி அதன் ஏராளமான நிர்வாக அலுவலகங்களும் மூடப்படுகின்றன.
இங்கிலாந்தில் மட்டும் 600 பயண ஏற்பாட்டு அலுவலகங்களைக் கொண்ட இந்த சுற்றுலா நிறுவனத்தில் மொத்தம் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தாமஸ் குக் நிறுவனம் திவாலாகி விட்டதால், அதன் போட்டி நிறுவனங்களான ரயன் ஏர், ஈசி ஜெட்டின் பங்குகளின் விலை ஏற்றம் கண்டது.
ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொடக்கத்தில் ரயன் ஏரின் பங்குகளின் விலை 2 விழுக்காடு அளவுக்கும், ஈசி ஜெட்டின் பங்குகளின் விலை 5 விழுக்காடு அளவுக்கும் உயர்ந்தன. ஜெர்மனியின் TUI நிறுவனத்தின் பங்குகளின் விலையும் 6 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது.