திமுக கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விசிக போட்டி

மக்களவை தேர்தல் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முடிந்துள்ளது. காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, ஐயூஎம்எல், மொகதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப்பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

மூன்று தொகுதிகள் வேண்டும் என்று முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கோரிக்கை விடுத்திருந்தோம். அரசியல் சூழலை கருத்தில் கொண்டும், கட்டுக்கோப்புடன் இயங்கி கூட்டணி வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்குடனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

மனம் திறந்து விரிவான விவாதங்களை நடத்தி முடித்து, எல்லா சூழல்களையும் கருத்தில் கொண்டு தான் 2 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டோம். திமுக எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கியது என்று சொல்வதை விட, நாங்கள் பகிர்ந்துக்கொண்டோம் என்றே கூற வேண்டும். வேட்பாளர்கள் யார் என்பது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிட திமுக ஒப்புதல் அளித்துள்ளது. பானை சின்னத்தில் போட்டியிடுவதாக ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், தெலங்கானாவில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கர்நாடகா, கேரளாவில் தலா மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் 15 நாட்களுக்கு முன்பாகவே மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே