தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி, தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமரிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்றவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக பிரதமர் மோடி முயற்சி செய்து, அதனை நிறைவேற்றினால், அவருக்கு தமிழர்கள் என்றென்றும் நன்றி பாராட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே