தமிழகத்தில் 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு

தமிழகத்தில் 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. போட்டித் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளியிட்டது.

8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

இதற்காக தமிழகத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நந்தனம் டெம்பிள் டவர்ஸ் கட்டிடம், சைதாபேட்டை ஜி.ஆர். டவர்ஸ் கட்டிடம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக கணினி வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

மொத்தம் 17 பாடங்களுக்கு தினமும் காலை, பிற்பகல் என இரு அமர்வுகளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.

154 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், சென்னை மையங்களுக்கு தமிழகத்தின் பிற இடங்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் தோடு, வளையல், கொலுசு, ஹை ஹீல்ஸ் செருப்பும், ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து செல்லவும் அனுமதியில்லை கால்குலேட்டர், செல்ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக, சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே