தமிழகத்தில் பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிங்கப்பூரைச் சேர்ந்த குழு ஒன்று, தமிழக அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் கட்டமாக பயிற்சிகள், அறிவுரைகள் வழங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சுகாதார துறை செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் இன்டர்நேசனல் பவுண்டேசனைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் இரண்டாம் கட்டமாக தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இக்குழுவினர் திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, பேறுகால தாய்- சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பான பல்வேறு கட்ட பயிற்சிகள், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து பேசிய அவர், இவ்விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்டார்.